ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் பகுதியில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், " திண்டுக்கல் - கோவை - சத்தியமங்கலம் வழியாக மைசூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. அதற்காக டெண்டர் விடப்பட்டு விரைவில் அப்பணிகள் தொடங்கப்படவுள்ளன.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் வழியாக இரண்டாம் போக பாசனத்திற்கும் நிலக்கடலை பயிரிடுவதற்கும் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் விரைவில் இதற்கான உத்தரவைப் பிறப்பிப்பார். பவானி ஆற்றின் குறுக்கே 10 இடங்களில் தடுப்பணை கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதன் மூலம் மழைக்காலங்களில் உபரிநீர் வீணாக கடலில் கலப்பது தடுக்கப்படுவதோடு நிலத்தடி நீர் மட்டம் உயரும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்க அமெரிக்காவிலிருந்து பயிற்சியாளர்கள் வர உள்ளனர்.
நீட் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெறும் வகையில் தற்போதைய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீட் தேர்வில் இம்முறை குறைந்தது ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறும் நிலை உருவாகும்" என்றார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் திமுகவிற்கு சவுக்கடி - ஜெகன் மூர்த்தி