ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியில் ரூ.55 கோடி செலவில் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகள் நடைபெற்றுவருகிறது. இதற்கென சாலையின் நடுவே ஆழமான குழி தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கடைவீதி மணிக்கூண்டு பகுதியிலிருந்து அஞ்சல் அலுவலகம் வழியாக கோட்டுவீராம்பாளையம்வரை செல்லும் சாலையில் குழாய்கள் பதிக்கப்பட்டு கப்பி சாலை அமைக்கப்பட்டது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆஞ்சநேயர் கோயில் முன்பு திடீர் பள்ளம் ஏற்பட்டதில் இச்சாலையில் சென்ற லாரியின் பின்சக்கரம் பள்ளத்தில் சிக்கி நகரமுடியாமல் நின்றது.
பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்கு தோண்டப்பட்ட குழிகளை சரிவர மூடாமல் பெயரளவுக்குப் பணி செய்துள்ளதாக நகராட்சி மீது பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பவானி ஆற்றுப்பாலம் அருகே திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா தலைமையிலான காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உடனடியாக நகராட்சி அலுவலர்களிடம் பேசி பழுதடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: பாதாள சாக்கடை கழிவு நீரேற்று நிலையம் அமைக்க எதிர்ப்பு - குடியிருப்புவாசிகள் ஆட்சியரிடம் மனு