சென்னை:கிண்டியில் உள்ள அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியிலிருந்த புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜியை நேற்று (நவ.13), 'தனது தாய்க்கு சரியான முறையில் சிகிச்சை மேற்கொள்ளவில்லை' என கூறி இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கினார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல் தகவல் அறிக்கை: இந்த நிலையில் இதுதொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் "நேற்று காலை 10.30 மணி அளவில் கிண்டி மருத்துவமனையில் வாய் மற்றும் முக சீரமைப்பு மருத்துவராக பணியாற்றும் சேது ராஜன் ஆகிய நான் மருத்துவமனையின் முதல் தளத்தில் பணியில் இருந்தேன்.
அப்போது எனது அறையின் எதிரே உள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவின் துறை தலைவர் மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதன் அறையில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. இதனால் நானும் என்னுடன் பணியில் இருந்த மருத்துவர்களும், உள்ளே பார்த்தபோது விக்னேஷ் என்பவர் மருத்துவர் பாலாஜி ஜெகநாதனிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.
பின்னர் விக்னேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருத்துவர் பாலாஜியின் தலைப்பகுதி, இடது கழித்து பகுதி, இடது காது மடல் மற்றும் இடது தோள்பட்டை ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டிய போது மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் அந்த அறையின் கதவை திறந்து தப்பித்து வெளியே வந்தார்.
அப்போது விக்னேஷ் அவரை விடாமல் துரத்தினார். அப்போது நானும் என்னுடன் இருந்தவர்களும் அவரை பிடிக்க முயற்சி செய்தபோது விக்னேஷ் எங்களை பார்த்து, 'எனது அம்மாவிற்கு சரியாக மருத்துவம் பார்க்கவில்லை என்பதால் அவரை நான் கத்தியால் வெட்டி கொலை செய்ய வந்தேன்.
இதையும் படிங்க: "மருத்துவர்கள் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி வேண்டும்" - மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு கோரிக்கை!
நான் வெட்டியதில் அவர் பிழைக்க மாட்டார். யாராவது என்னை பிடிக்க வந்தால் உங்களையும் கத்தியால் குத்தி கொன்று விடுவேன்'. என கொலை மிரட்டல் விடுத்து விக்னேஷ் அங்கிருந்து தப்பி செல்லும்போது நாங்கள் சத்தம் போடவே எங்கள் சத்தத்தை கேட்டு மருத்துவமனையின் காவலர்கள் மற்றும் மருத்துவமனையின் அலுவலக கண்காணிப்பாளர் முத்து ரமேஷ் ஆகியோர் கீழ் தளத்தில் வைத்து விக்னேஷை மடக்கி பிடித்தனர்.
இதன் பின்னர் மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதி மற்றும் கிண்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் அவர்களை மீட்டு அவசர சிகிச்சை பிரிவு சேர்த்தோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து புகாரின் அடிப்படையில் கிண்டி காவல் துறையினர் விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, "தனது தாயார் பிரேமா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அவருக்கு அளவுக்கு அதிகமாக கிமோ தெரபி சிகிச்சை அளித்ததால் நுரையீரல் பிரச்சனை சுவாச பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது.
இதனால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றறோம். அப்போது, அவரை காப்பாற்ற முடியாது என கூறியதால் தன் தாய் படும் வேதனையை பார்க்க முடியாமல் தன் தாய்க்கு சரியான சிகிச்சை அளிக்காத மருத்துவர் பாலாஜி ஜெகநாதனை கத்தியால் குத்தினேன் என விக்னேஷ் வாக்கு மூலம் அளித்தாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 பிரிவின் கீழ் வழக்கு: இதையடுத்து கிண்டி காவல் துறையினர் விக்னேஷ் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் (பிஎன்எஸ்) பிரிவுகள் 127(2),115(2),()118(1),121(2),109,351 மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவையில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷை கிண்டி போலீசார் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றம் ஒன்பதாவது குற்றவியல் நடுவர் நீதிபதி சுப்ரமணியம் முன் ஆஜர்படுத்தினர். அப்போது விக்னேஷுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் அவரை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.