தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். ஜெயலலிதா இல்லாமல் முதல் தேர்தலை சந்திக்க இருக்கும் அதிமுகவின் இருப்பை தக்கவைக்கவும், தன்னை ஒரு ஆளுமையாக நிரூபிக்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு வியூகங்களை வகுத்து களத்தில் இறங்கியுள்ளார்.
அதன்படி, 'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்னும் தலைப்பில் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறார்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வருகை தர உள்ளார். 'வெற்றி நடைபோடும் தமிழகம்' தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ்பிஎஸ் கார்னர், புஞ்சைபுளியம்பட்டி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் மத்தியில் அவர் பேச இருக்கிறார்.

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு சத்தியமங்கலத்தில் இருந்து புஞ்சைபுளியம்பட்டி செல்லும் சாலையில் முக்கிய இடங்களில் அதிமுக கொடிகள் கட்டும் பணி மற்றும் பதாகைகள் வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் கொடிகள் கட்டவோ பேனர் வைக்கவோ காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. ஆனால், அதிமுகவினர் விதிமுறையை மீறி பவானி ஆற்றுப்பாலத்தில் அதிமுக கொடிகளை கட்டும் பணியை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம்: ஆண்டாளிடம் ஆசிபெற்ற முதலமைச்சர் பழனிசாமி!