தை மாத பெளர்ணமியான இன்று தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கந்தர்சஷ்டி அரங்கேற்றப்பட்ட ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்தக் கோயிலின் தைப்பூச விழா கடந்த மாதம் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் சுவாமிக்கு பல்லக்குச் சேவை, மயில் வாகன காட்சி, பஞ்சமூர்த்தி புறப்பாடு வெள்ளி மயில் வாகன காட்சி என முருகப் பெருமான் பல்வேறு வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா இன்று அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக இன்று அதிகாலை 3 மணியளவில் மலையடிவாரத்திலுள்ள கைலாசநாதர் கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு பக்தர்கள் முன்னிலையில் பல்வேறு திரவியப் பொருட்களைக் கொண்டு அபிசேகம் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், சுவாமிகளுக்கு பல்வேறு மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த சுவாமியை பக்தர்கள் தோளில் சுமந்தபடி ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்கிற பக்தி முழக்கங்களுடன் கோயிலிலிருந்து தேருக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் முருகன் புகழ் பாடும் முழக்கங்களை எழுப்பியபடி தேரின் வடத்தை இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தனர். தேரோட்டத்தின் போது பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு பகுதிகளிலிருந்து இரவு பகலாக நடைப் பயணமாக காவடி ஆட்டம், கரகாட்டங்களுடன் வந்து சுவாமியை தரிசித்தனர்.
மேற்குரத வீதியில் தொடங்கிய தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக வந்து தெற்கு ரத வீதியில் நிலை நிறுத்தப்பட்டது.
தேரோட்ட நிகழ்ச்சியில் ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் தனியரசு, தென்னரசு, கே.வி.ராமலிங்கம், தோப்பு வெங்கடாசலம், சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கோலாகலமாக நடந்த ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் தேர்த் திருவிழா!