ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான சிறுத்தைகள் வசித்து வருகின்றன. சமீபத்தில் உணவுகளைத் தேடி சிறுத்தைகள் வனத்திலிருந்து வெளியேறி தோட்டத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால், வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், தாளவாடியிலிருந்து தலமலை சென்ற கார் ஒன்று சிக்ஹள்ளி வனப்பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நின்ற சிறுத்தை, வாகனத்தைக் கண்டு பயப்படாமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. இதை பயணிகள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிக்ஹள்ளி பகுதியில் சிறுத்தைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்கிற்காக தயார் செய்யப்பட்ட மைதானம் திறப்பு!