ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோயில் தைப்பூசத் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றுவருகிறது. இதில், காங்கேயம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தனியரசு கலந்துகொண்டார். இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஏழு தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது.
ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது. இருந்தும் ஆளுநர் காலம் தாழ்த்துவது கண்டிக்கத்தக்கது. இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், நடிகர் விஜய்யின் படப்பிடிப்புத் தளத்திற்கே சென்று வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியது குறித்து கருத்து தெரிவித்த அவர், நடிகர் ரஜினிக்குப் போட்டியாக உள்ள நடிகர் விஜய்யை களங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மத்திய அரசு வருமானவரித் துறையை ஏவியுள்ளது.
இதன் மூலம் விஜய்யை பணிய வைக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. ஒட்டுமொத்த தமிழ் மக்கள் அனைவரும் நடிகர் விஜய்யின் பின்னால் நிற்க வேண்டிய சூழலை மத்திய அரசு ஏற்படுத்தாது என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
இதையும் படிங்க: ‘எழுவர் விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும்’ - இல. கணேசன்