ஈரோடு: சமீப காலமாக கால்நடைகள் மற்றும் விலங்குகளின் தொந்தரவு அதிகமாக இருந்துவரும் நிலையில், ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் நாய் கடித்ததில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சம்பவம், அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாய் கடித்தலின் பெரும்பாலான நிகழ்வுகள், அப்பகுதியில் ஆதிக்கத்திற்கான சண்டை மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடையவை என கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதி அருகே உள்ள சாலைப்புதூர், தளுவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அப்பகுதியில் வெறிநாய் ஒன்று சாலையில் சுற்றி திரிந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த நாய் அவ்வழியாக வந்த பொதுமக்களைக் கடிக்க தொடங்கியுள்ளது. இதனால் அவ்வழியே வந்த 10 பேரை, நாய் கடிக்க தொடங்கியுள்ளது. இதில் பொதுமக்கள் சண்முகம், சுப்ரமணி, ரமேஷ், சோமசுந்தரம் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து அந்த 10 பேரும் கொடுமுடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்து கொடுமுடி காவல் நிலைய போலீசார் மருத்துவமனைக்கு விரைந்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் இடையே ஒரு தனியார் நிறுவனத்தின் முன்பு வாகனத்தை எடுக்க முயன்ற நபரை வெறிநாய் கடிப்பது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் சாலையில் வாகனத்தில் செல்பவர்கள் உட்பட அனைவரையும் வெறிநாய் கடித்து வரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் வெறிநாயை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெப்பநிலை அதிகரிப்பு, உணவுப் பற்றாக்குறை, போக்குவரத்து இரைச்சல், பிரகாசமான விளக்குகள் போன்ற காரணங்களால் தெருநாய்கள் பாதிக்கப்படுகின்றதாகவும், இத்தகைய சூழ்நிலைகளில் அவை ஆக்ரோஷமாக மாறும் எனவும் கூறப்படுகிறது.
நாய்க்கடிக்கு முதலுதவியாக, கடித்த இடத்தை தண்ணீர் மற்றும் சோப்பினால் குறைந்தது பத்து நிமிடங்களாவது கழுவ வேண்டும் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. நாய் கடித்த நாள், மூன்றாம் நாள், ஏழாவது நாள், பதினான்காம் நாள், அதன்பின் இருபத்தெட்டாம் நாள் என ஐந்து ஊசிகள் போடப்பட வேண்டும் எனவும் கூறப்படுகிறது.