ஈரோடு: மலைப்பாதைகளில் ஆபத்தை உணராமல் செல்லும் வாகனங்களால் தொடர் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதையில் லாரி மீது வேகமாக சென்ற பேருந்து மோதி விபத்துக்கு உள்ளானது. தற்போது, அந்த விபத்து குறித்த பதைபதைக்கு சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதையில் வரட்டுபள்ளம் அணைப்பகுதியில் நேற்று முன்தினம் (நவ.22) கர்கேகண்டியில் இருந்து பவானி நோக்கி வந்த தனியார் பேருந்து, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம் சென்று கொண்டிருந்த லாரி மீதும் மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த சிசிடிவி பதிவில், பர்கூர் மலைப்பாதையில் லாரி ஒன்று பிரேக் டவுன் ஆகி இடது புறமாக நின்று கொண்டு இருந்துள்ளது.
அப்போது தனியார் பேருந்து ஓட்டுநர் நின்று செல்லாமல், வேகமாக அதனை ஓவர் டேக்ஸ் செய்த போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி, தொடர்ந்து லாரி மீதும் மோதி நிற்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த விபத்து தொடர்பாக தனியார் பேருந்தின் ஓட்டுநர் பாலாஜி (26) மீது பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் சகாதேவன் (46), இருசக்கர வாகன ஓட்டுநர் தனபால் (55) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில், ஐந்து பேருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
தற்போது மலைப்பாதையில் வேகமாக சென்ற பேருந்து எதிரே வந்த லாரி மற்றும் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்கு உள்ளான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூல வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: நாட்டு வைத்தியர் வீட்டில் தோண்ட தோண்ட எலும்பு கூடு..! மற்றொரு மண்டை ஓடு கிடைத்ததால் பதற்றம்!