ஈரோடு: புஞ்சை புளியம்பட்டியில் உள்ள கால்நடை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனை நடைபெறுவது வழக்கம். தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்கள், கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். கரோனா தளர்வுகளுக்குப் பிறகு கடந்த இரு வாரமாக சந்தை செயல்படுகிறது.
இந்நிலையில் இன்று (ஜூலை 22) கால்நடை சந்தைக்கு 50 எருமைகள், 600 கலப்பின மாடுகள், 300 ஜெர்சி மாடுகள், 100 வளர்ப்பு கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். எருமைகள் 16 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய், ஜெர்சி 23 ஆயிரம் முதல் 52 ஆயிரம் ரூபாய், வளர்ப்பு கன்றுகள் 6000 முதல் 14 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையானது.
சந்தைக்கு கொண்டு வரப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் மொத்தம் இரண்டு கோடி ரூபாய் வரை விற்பனையானது. கறவை மாடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு வாங்கி செல்வதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கொற்கை அகழாய்வு - 4 அடுக்கு சுடுமண் குழாய்கள் கண்டுபிடிப்பு