ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கொத்தமங்கலத்தில் 3 மாத குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கிராமத்துக்கு வந்த ஆம்புலன்ஸ், குழந்தையை ஏற்றிக் கொண்டு சத்தியமங்கலத்தில் இருந்து புஞ்செய் புளியம்பட்டி வழியாக கோவை மருத்துவமனையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில், ஆம்புலன்ஸ் நல்லூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற கார் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் தொடர்ந்து வேகமாக சென்று கொண்டிருந்துள்ளது. தொடர்ந்து பலமுறை ஹாரன் அடித்தும், சைரன் எழுப்பியும் கார் வேகத்தை கட்டுப்படுத்தவோ, ஓரமாக ஒதுங்கவோ இல்லாமலே சென்றுள்ளது.
எனவே ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர், இதனை வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களிலும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் ஆம்புலன்ஸ்க்கு கார் வழிவிடாததால், குழந்தைக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியவில்லை என ஆம்புலன்ஸ் உரிமையாளர் கதிர், சத்தியமங்கலம் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், வீடியோவில் பதிவான கார் எண்ணை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் வேகமாக காரை ஓட்டிச் சென்றவர், கோவை கரும்புகடை சுலைமான் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி, உயர் காக்கும் ஆம்புலன்ஸுக்கு வழிவிடாத காரணத்தால், கார் ஓட்டுநர் சுலைமானுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தவிட்டார்.
அப்போது தனது செயலுக்கு மன்னிப்பு கேட்ட சுலைமான், போக்குவரத்து துறையால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையையும் கட்டினார். இதனிடையே இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Viral video: உயிருக்கு போராடிய குழந்தை...ஆம்புலன்ஸூக்கு வழிவிடாத கார்...