சத்தியமங்கலம் அருகே உள்ள பசுவபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் ஐந்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். மேய்ச்சலுக்குப் பின்னர் ஆடுகளை தனது வீட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள கிடையில் அடைப்பது இவரின் வழக்கம். இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி அதிகாலை வனத்தைவிட்டு சிறுத்தை ஒன்று வெளியேறியுள்ளது. இந்தச் சிறுத்தை பசுவபாளையம் கிராமத்தில் புகுந்து சுப்பிரமணிக்குச் சொந்தமான கிடையிலிருந்த மூன்று ஆடுகளை அடித்துக் கொன்றுள்ளது.
கிராமத்திற்குள் சிறுத்தை புகுந்த தகவலறிந்து அச்சமடைந்த கிராம மக்கள், வீட்டை விட்டு வெளியே செல்லவே தயங்கினர். ஊருக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தும் சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, பவானிசாகர் வனத்துறையினர் இன்று சிறுத்தையைப் பிடிப்பதற்காகக் கிராமத்தை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் கூண்டு வைத்துள்ளனர்.
இந்தக் கூண்டில் இன்று மாலை ஆட்டைக் கட்டி வைத்து, இரவு நேரத்தில் வனத்துறை பணியாளர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.