ஈரோடு: தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள தாளவாடி, ஆசனூர், அரேபாளையம், கேர்மாளம், தலமலை, கொங்கள்ளி, அருள்வாடி, மல்லன்குழி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் மலைக்காய்கறியான முட்டைகோஸ் சுமார் 600 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. 3 மாத பயிரான முட்டைக்கோஸ் தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளது.
கர்நாடகத்தில் இருந்து வரத்து அதிகமாக வருவதாலும் நீலகிரியில் முட்டைகோஸ் விளைச்சல் அதிகரித்துள்ளதாலும் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.12 வரை விற்கப்பட்ட முட்டைகோஸை, தற்போது வியாபாரிகள் கிலோ ரூ.2க்கு கொள்முதல் செய்கின்றனர். ஏக்கர் ஒன்றுக்கு நாற்று நடவு, களையெடுத்தல், உரம், மருந்து தெளித்தல் என ரூ.80 ஆயிரம் வரை செலவாகிறது.
ஒரு கிலோ உற்பத்தி செய்ய ரூ.10 செலவாகிறது. ஆனால், கொள்முதல் விலையோ ரூ.2 ஆக உள்ளது. கொள்முதல் விலையினை விட உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். குறைந்தபட்சமாக முட்டைகோஸ் கிலோ ரூ.10க்கு விற்கப்பட்டால் மட்டுமே விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும். விவசாயிகளிடம் கிலோ ரூ.2க்கும் வாங்கும் வியாபாரிகள் வெளிமார்க்கெட்டில் கிலோ ரூ.30க்கு விற்கின்றனர். இடைத்தரகர்களால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தாளவாடி விவசாயிகள் கூறுகையில், ’இந்தாண்டு தொடர்ந்து மழை பெய்துள்ளதால் முட்டைகோஸ் மகசூல் ஏக்கர் ஒன்றுக்கு 8 டன்னில் இருந்து 12 டன்னாக அதிகரித்துள்ளது. இதனால் வரத்து அதிகம் எனக் காரணம் கூறி விலையை வியாபாரிகள் குறைத்துவிட்டனர். கடந்த ஆண்டு இதே நாளில் கிலோ ரூ.40க்கு விற்கப்பட்டது.
இடைத்தரகர் இன்றி அரசு நேரடியாக கொள்முதல் செய்தால் கட்டுபடியான விலை கிடைக்கும்’ என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முட்டைகோஸ் அறுவடை செய்யும் கூலியை விட கொள்முதல் விலை குறைவாக இருப்பதால் விவசாயிகள் முட்டைகோஸை அழித்து காட்டில் உரமாக விடுவதா அல்லது கால்நடைகளுக்குத் தீவனமாக விடுவதா என வேதனையுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:சிறுமி தான்யாவிற்கு மீண்டும் சிறிய அறுவை சிகிச்சை!