ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அருகே கேர்மாளம் ஊராட்சியில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு உள்ள சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டதால் உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி, சாலையைச் சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து கடந்த நான்கு மாதம் முன்பு, ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக ஏற்கெனவே இருந்த சாலையைத் தோண்டியதால் சாலை மேலும் மோசமானது. இதுவரை ஜல்லி கற்கள் மட்டுமே கொட்டப்பட்டு வந்து உள்ளன.
இதனால் சாலை புதுப்பிக்கும் பணி கடந்த இரண்டு மாதமாக நடைபெறவில்லை. ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டு இருப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பேருந்துகள் செல்லமுடியாமல் சிரமத்துக்குள்ளானார்கள். கடந்த பத்து நாட்களாக இந்த சாலை வழியாக மலைக்கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்தும் நிறுத்தப்பட்டு உள்ளது
காலை, மதியம், மாலை என மூன்று பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பேருந்து நிறுத்தப்பட்டு உள்ளதால் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பாதிப்புள்ளாகியுள்ளனர். பேருந்து வசதியில்லாததால் மக்கள் வாடகை வேன், டெம்போக்களில் செல்கின்றனர்.
இதனால் கூடுதல் வாடகை கொடுக்கும் நிலைக்கு ஏழை எளிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். செல்போன் சேவை கூட இல்லாத இந்த மலைக் கிராமங்களில் தற்போது பேருந்தும் நிறுத்தப்பட்டு உள்ளதால் அவசரத் தேவைக்கு வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பாதையில் உயிரைப் பணயம் வைத்தே நடந்தே செல்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனே கிடப்பில் போடப்பட்டு உள்ள சாலையைச் சீரமைக்க வேண்டும் எனவும் மலைக்கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:
' ஸ்டாலின் காந்தியும் இல்லை; நான் புத்தனும் இல்லை ' - எகிறிய அமைச்சர் சி.வி. சண்முகம்