ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது 'நிசப்தம் நண்பர்கள் குழு'வின் மூலம் ஆதரவற்றவர்களுக்கு நன்கொடையாளர்களின் மூலம் பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறார்.
இந்நிலையில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த வெளிநாட்டில் வேலை பார்க்கும் சசிக்குமார், சரவணக்குமார் சகோதரர்கள், "எங்கள் தாய் தந்தையரான சங்கரமூர்த்தி - தனலட்சுமி தம்பதியரின் மணிவிழா நடைபெறும் அதே நாளில், ஆதரவற்ற மூன்று பெண்களின் திருமணத்திற்கு சீர்வரிசை கொடுத்து உதவிட நினைக்கிறோம் மணி விழாவிற்கு செலவழிக்கும் தொகையை இந்த சீர்வரிசைக்கு அளிப்போம்" என நிசப்தம் நண்பர்கள் குழுவினரிடம் தெரிவித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து நிசப்தம் நண்பர்கள் குழுவினர் கோபிசெட்டிபாளையம் பகுதியின் பல்வேறு கிராமங்களில் உள்ளவர்களை அணுகி தாய் - தந்தையரை இழந்து ஆதரவற்ற நிலையிலிருந்த சந்தியா, சுபரஞ்சனி, ஆனந்தி ஆகிய மூவரை கண்டறிந்தனர்.
தொடர்ந்து, சசிக்குமார்-மணிக்குமார் சகோதரர்கள் தங்களது பெற்றோரின் மணி விழாவில், தாய் - தந்தையரை இழந்து ஆதரவற்ற அந்த மூன்று பெண்களுக்கு திருமணத்திற்கு பின் அவர்கள் குடும்பம் நடத்த தேவையான கட்டில், பீரோ, அடுப்பு, சமையல் பாத்திரங்கள், ஒரு சவரன் தங்க சங்கிலி உள்பட மூன்று லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைப் பொருள்களை வழங்கி மகிழ்ந்தனர்.
ஆடம்பரமாக செலவுசெய்து பெற்றோருக்கு மணிவிழா காணுவோர் மத்தியில், ஆதரவற்ற பெண்களுக்கு உதவிட நினைத்து அதனை சிறப்பாகக் கொண்டாடிய மணிகண்டன், சரவணக்குமார் சகோதரர்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். மகிழ்வித்து மகிழ் ...!
இதையும் படிங்க: கண் விழிகளில் பச்சை குத்தி கண் தெரியாமல் அலைந்த பெண்... ரூ. 12 லட்சம் இழந்த பரிதாபம்!