தமிழர்களின் பாரம்பரிய அறுவடைக்கான மாதமாக தை விளங்குகிறது. தை மாதம் தொடங்கவுள்ள நிலையில் இந்த ஆண்டிற்கான முதல்போக நெல் அறுவடையை ஈரோடு மாவட்ட விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து பேசிய கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, "நடப்பாண்டு, முதல்போகத்திற்கு மாவட்டம் முழுவதும் வேளாண் துறையின் சார்பில் 36 லட்சத்து 900 ஹெக்டோர் விவசாய நிலத்தில் நெல் பயிரிடப்படும் என்று திட்டமிட்டிருந்த நிலையில் 28 லட்சத்து 215 ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கு நெல் நடவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
நெல் சாகுபடிக்கான பரப்பளவு குறைந்தாலும் கடந்த ஆண்டைவிட 80 ஆயிரம் கிலோ நெல் அதிகம் உற்பத்தி செய்யப்படும் என்று வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்திருந்தார். மேலும், வேளாண் துறை அலுவலர்களின் அறிவுரையின்படி அதிக முட்டுக்கூலி செலவுகள் இல்லாத நெல் ரகங்களான கே-50, கே-51 உள்ளிட்ட பயிர் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
இந்தாண்டு பயிரிடப்பட்டுள்ள பயிர் ரகங்கள் நோய் தாக்குதல் இன்றியும், பூச்சி மருந்து, பூஞ்சாலை மருந்து உள்ளிட்ட ரசாயன மருந்துகள் அதிகம் பயன்படுத்தாமல் நெல் பயிர் ரகங்கள் தரமானதாக விளைந்துள்ளன.
அரசு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையத்தில் 40-கிலோ எடையுள்ள நெல் மூட்டை ஒன்றுக்கு கொள்முதல் செய்ய 40 ரூபாயை அலுவலர்கள் லஞ்சமாக வாங்குவதால் லஞ்சம் இல்லாத கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
மாவட்ட முழுவதும் உள்ள பாசன பகுதியில் பயிரிடப்பட்டுள்ள அனைத்து பயிர் ரகங்களும் நல்ல முறையில் விளைந்து அறுவடை செய்யப்பட்டுவருவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: இயற்கை அறுவடையில் அசத்தும் விவசாயி!