ஈரோடு: ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்குச் சொந்தமாக பேருந்து நிலையம், சத்தியமங்கலம் சாலை, கோவை சாலை உள்ளிட்டப் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வணிக வளாக கடைகள் உள்ளன.
இதில் 40க்கும் மேற்பட்ட கடைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏலம் எடுத்தவர்கள் கடைகளைப் பூட்டி வைத்திருந்தனர். இரண்டு ஆண்டுகளாக கடைகள் பூட்டி இருந்ததால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் வாடகை செலுத்துமாறு கடைகளை ஏலம் எடுத்தவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் பலமுறை எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியும் வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (நவ.9) நகராட்சி ஆணையாளர் சையது உசேன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் பூட்டி இருந்த கடைகளின் பூட்டை அதிரடியாக உடைத்து உள்ளே இருந்த பொருட்களை ஜப்தி செய்து நகராட்சி வாகனத்தில் ஏற்றி நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடகை செலுத்தாத கடைகளின் பூட்டை உடைத்து பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டதாகவும், ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள் பொது ஏலம் விடப்படும் என்றும்; அதேபோல் பூட்டி வைக்கப்பட்டிருந்த அனைத்து கடைகளும் விரைவில் பொது ஏலம் விடப்படும் எனவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சட்டவிரோதப்பணி நியமனம்; பொதுப்பணித்துறைச்செயலர் ஆஜராக உத்தரவு!