ஈரோடு: சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று (அக். 31) இரவு தொலைபேசி மூலம் மர்ம நபர் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து உடனடியாக ஈரோடு காவல் துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தொலைபேசி மூலம் அழைத்த மர்ம நபர், ஈரோடு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஈரோடு எஸ்பி ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு நகர காவல் துறையினருக்கு தகவல் அனுப்பப்பட்டது.
இதையடுத்து போலீசார் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கயல் உதவியுடன் ஈரோடு ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். கார் பார்க்கிங், இருசக்கர வாகன பார்க்கிங், ரயில்வே பார்சல் சர்வீஸ் கிடங்கு, ரயில்வே நடைபாதையில் உள்ள கடைகள் மற்றும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட இடங்களில் போலீசார் உள்ளிட்டோர் சோதனை நடத்தினர்.
20க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர சோதனை நடத்தியதில் அதிர்ஷ்டவசமாக எந்த வெடிகுண்டும் கண்டறியவில்லை என்றும் மிரட்டல் போலி என உறுதியானதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் ஆந்திர மாநிலத்தில் இருந்து போன் செய்த மர்ம நபர் யார் என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே ஆண்டில் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது இரண்டாவது முறையாகும். இந்த மிரட்டல் சம்பவத்தால் பொது மக்கள் மற்றும் ரயில் பயணிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. இதற்கு முன்னதாக கடந்த முறை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தோஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கணவனுக்கு தெரியாமல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்.. வீட்டுக்குள் நுழைந்த இளைஞரால் நேர்ந்த விபரீதம்..