ஈரோடு:ஈரோடு நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஈரோட்டில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அண்ணாமலை , ”தமிழ்நாட்டு முதல்வர் காணொலி மூலம் பிரச்சாரம் செய்து வருகிறார்,அவரே அவரது ஆட்சிக்கு 100க்கு 100 மதிப்பெண் போட்டுக் கொள்கிறார். குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வீதம் உரிமைத்தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதனை வழங்காமல் தற்போது, புதுபுதுக் காரணங்களைச் சொல்லி வருகின்றனர்.
யார் குடும்பத்தலைவி என்று கணக்கீடு செய்வதாக, தமிழ்நாடு நிதி அமைச்சர் சட்டசபையில் கூறுகிறார். குடும்பத் தலைவிகளைக் கண்டுபிடிக்க 8 மாதம் ஆகிறதா?. தமிழ்நாட்டில் ரேஷன்கார்டு பதிவின்படி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க வேண்டுமானால், ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி தேவைப்படும் என்ற நிலையில் பட்ஜெட்டில் இதற்கு நிதி ஒதுக்காமல், அரசாணை வெளியிடமால், தற்போது திமுகவினர் ஒரு பேப்பரைக் கொடுத்து, பெயர் விபரம் சொல்லச் சொல்லி நாடகம் நடத்துகின்றனர்.
காதில் பூ சுற்றும் திமுக
8 மாதத்திற்கு முன்பு வாக்காளரின் ஒரு காதில் பூ சுற்றிய திமுகவினர், தற்போது இன்னொரு காதில் பூ சுற்றப் பார்க்கின்றனர். பெண்களின் நகைக்கடன் ரத்து எனச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது, வங்கியில் உள்ள 73 சதவீத நகைகளுக்கு தள்ளுபடி இல்லை என்று சொல்லி விட்டனர்.
நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 172 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி மருந்தினை, கடைசி மனிதனுக்கும், எவ்வித பிரச்சினையும் இல்லாமல் கொண்டு சேர்த்தது பாஜகவின் சாதனை. பிரதமர் மோடியின் சாதனை.
தரமற்றப் பொருட்களை பொங்கல் தொகுப்பாக வழங்கி ஊழல் செய்துள்ளனர். மஞ்சள் பையில் ரூ 130 கோடி, கரும்பில் ரூ 33 கோடி என எல்லாப் பொருட்களிலும் ஊழல் நடந்துள்ளது. இத்தனையும் செய்துவிட்டு, உள்ளாட்சியில் நல்லாட்சி தருவதாக திமுகவினர் பொய் சொல்லி வருகின்றனர்.
பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சாதாரணமானவர்கள். உங்களுக்கு சேவை செய்ய வந்திருக்கும் அவர்களை ஆதரியுங்கள்” எனத் தெரிவித்தார்.
மொடக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சி.சரஸ்வதி, மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:'எனது முன்மாதிரி கோட்சே' - போட்டி நடத்திய அலுவலர் பணியிடை நீக்கம்!