ஈரோடு: சித்தோட்டில் ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி பாஜக அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அதன் பின்னர் முருகானந்தம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "தற்போது வரை தமிழகத்தில் 119 தொகுதிகளில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையை நிறைவு செய்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் பாதயாத்திரை மேற்கொள்ள இருந்த நிலையில் கனமழை காரணமாகத் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
நடைப் பயணத்தின் போது பொதுமக்கள் மாநிலத் தலைவரிடம் தொடர்ந்து கோரிக்கை மனுக்களை வழங்கி வருகின்றனர். அரசு அலுவலகங்களில் கூட பொதுமக்கள் மனுக்களைக் கொடுப்பதில்லை பாஜக அலுவலகங்களைத் தேடி வந்து நாள்தோறும் மனுக்களைக் கொடுத்து வருகின்றனர்.
திமுக-வினரிடம் கோரிக்கை மனுக்களைக் கொடுப்பதற்குத் தமிழ்நாடு மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். தற்போது நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் பாஜக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று உள்ளது. தென்னிந்தியாவில் பாஜக தற்பொழுது 14 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது.
இன்றைக்கு தமிழ்நாட்டில் மக்கள் வரிப்பணம் 4000 கோடி ரூபாய் திமுகவால் நாசம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது தமிழகத்தை ஆளுகின்ற திமுக வெள்ள நிவாரணத்திற்காக பணம் வேண்டும் என்றால் மட்டுமே மத்திய அரசு என கூறுகின்றனர் மற்ற நேரங்களில் ஒன்றிய அரசு என்கின்றார்கள்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்களவையில் திமுக எம்.பி. செந்தில் குமார் கூறியது என்ன? எதிர்ப்பு வலுக்க என்ன காரணம்? முழுத் தகவல்!