ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகே பாஜக கேந்தரா நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அதன் மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் இரண்டாம் தலைநகரமாக கோவையை அறிவிக்க வேண்டும். சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை பாஜக செய்யத் தொடங்கி விட்டது. கரோனா நோயாளிகளுக்கு கோவையில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை கிடைப்பது சிரமமாக உள்ளது.
சென்னையைப் போல் மாநிலம் முழுவதும் தனி மருந்து பெட்டகம் வழங்க வேண்டும். மத்திய அரசு, மாநில அரசுக்கு 6,600 கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளது. அதே போன்று ஜிஎஸ்டி வரி வருவாயையும் வழங்கி உள்ளது. ஆகவே தமிழ்நாடு அரசு சிறந்த மருத்துவ வசதிகளை பொது மக்களுக்கு செய்து தர வேண்டும்.
எய்ம்ஸ் மருத்துவமனை மட்டுமல்ல, 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதியும், நிதி உதவியும் வழங்கி உள்ளது. எனவே தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையக் காரணம் பாஜக தான். மாநில அரசு தான் மற்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இந்தி தான் படிக்க வேண்டும் என வற்புறுத்தவில்லை. ஏதாவது ஒரு மூன்றாவது மொழியைக் கற்க வேண்டும் என்று தான் கூறுகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைப்பதே லட்சியம்”- வானதி சீனிவாசன் சூளூரை