ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அலங்காரிபாளையத்தில் அய்யா கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் அய்யா கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஐயா கோயிலில் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட பல்வேறு வகையான உருவ மண் பொம்மைகள் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக விற்பனை செய்யப்படுகிறது.
இந்த உருவ பொம்மைகளை விலை கொடுத்து வாங்கி அய்யனுக்கு பூஜை செய்து கோயில் முன்பு கொட்டி உடைத்தால் வீடு மற்றும் விவசாய தோட்டுப் பகுதிகளில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் இருக்காது என்பது நம்பிக்கை.
இதனையடுத்து, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, நம்பியூர், அன்னூர், அவிநாசி, கோபிசெட்டிபாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று அய்யனை வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட மண் உருவ பொம்மைகளை விலை கொடுத்து வாங்கி கல்லால் கொட்டி உடைத்து வழிபாடு செய்தனர்.
இதையும் படிங்க: ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடத்த அனுமதி - நீதிமன்றம் அதிரடி உத்தரவு