உலகில் பல நாடுகளில் பறவைக் காய்ச்சல் பரவி மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் சில மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்திலும் சமீபத்தில் இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டில் இந்த நோய் பாதிப்பு இன்னும் கண்டறியப்படவில்லை என்ற போதிலும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் பாதைகளான பண்ணாரி, கடம்பூர் மலைப்பாதை ஆகிய வழித்தடங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கேரளாவிலிருந்து வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ். கதிரவன் அனைத்து கால்நடை மற்றும் வனத்துறையினருக்கு பல்வேறு அறிவுரைகளை அரசு துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.
அதுமட்டுமின்றி, கேரள மாநிலத்திலிருந்து பொருள்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரக்கூடாது என்றும், தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லும் பொருள்களையும் மீண்டும் தமிழ்நாட்டுக்கு திருப்பிக் கொண்டு வரக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தேவையான மருந்துகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தேவையான கருவிகளையும் தயார் நிலையில் வைக்க சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் அடைய வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க...போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு!