ஈரோடு: கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் ஏழு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தினசரி சந்தை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி, அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தனர்.
பின்னர் செய்தியாளரைச் சந்தித்த முத்துசாமி, “ஈரோட்டைப் பொறுத்தவரை இரண்டு பேருந்து நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கனிராவுத்தர் குளத்தில் 15 ஏக்கரிலும் சோலார் பகுதியில் 22 ஏக்கரிலும் இரண்டு பேருந்து நிலையங்கள் இந்திய அளவில் சிறந்த மாதிரி பேருந்து நிலையங்களாகக் கட்டப்படும்.
அதேபோன்று சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசு எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை. ஆனால் அவர்களால் நடத்த முடியாத நிலை உள்ளதால் அரசு ஒரு மாத காலத்தில் எடுத்து நடத்த உள்ளது. அந்தக் கல்லூரி வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டும்
வீட்டு வசதி துறையில் 30 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்காகப் புறநகர் உருவாக்க இடம் கையகப்படுத்த வேண்டும். ஏற்கனவே இதுபோன்று கையகப்படுத்தப்பட்ட நிலம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாரியத்திடமே உள்ளது.
நிலத்தின் மதிப்பீடு குறித்து ஆய்வுசெய்த பின்னரே நிலம் கையகப்படுத்தப்படும். ஏற்கனவே கட்டப்பட்ட வாடகைக்கு விடப்பட்டுள்ள கட்டடங்களில் 60-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. அதை இரண்டு ஆண்டுகளில் சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
கோயம்புத்தூரில் கிட்டத்தட்ட 1,350 வீடுகள் இடியும் தருவாயில் உள்ளன. அதை அரசு பொறுப்பெடுத்து செய்ய வேண்டியது இல்லை என்றாலும் மக்களுக்காக அரசு செய்யும். குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகராட்சி எல்லை விரிவாக்கம் என்பது துறை மட்டுமே முடிவுசெய்தால் போதும். மாவட்டம் பிரிப்பது குறித்து கொள்கை முடிவு என்பதால் முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டும்.
கோபிசெட்டிபாளையத்தை தனி மாவட்டமாகப் பிரிப்பதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மாவட்டத்தைப் பிரிப்பது என்பது நிர்வாக வசதிக்காகத்தான் பிரிக்கப்படுகிறது. இதை ஆய்வு செய்துதான் செய்வார்கள்” எனப் பேசினார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு: சாட்டை துரைமுருகன் கைது