ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீராகவும், பாசனத்திற்கும் உதவியாக இருக்கும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும், நீர் இருப்பு 28.5 டிஎம்சியாகவும் உள்ளது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் 105 கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியுடன் 100 நாள்கள் நீடித்தது. அணையில் போதுமான நீர் இருப்பு காரணமாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் கீழ்பவானி வாய்க்காலில் நெல் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்ப்பட்டு டிசம்பர் வரை நீடித்தது.
இதன் காரணமாக கீழ்பவானி வாய்க்கால் பாசன விவசாயிகள் முதல்போக சாகுபடி செய்தனர். அதனைத் தொடர்ந்து இரண்டாம் போக பாசனமான எள், கடலை சாகுபடிக்கு 6 சுற்றுகள் என தொடர்ந்து ஜனவரி 9ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு மே 30ஆம் தேதிவரை தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்தாண்டு இரண்டு போக பாசனத்துக்கும் மொத்தமாக 36 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மொத்தமாக 2 லட்சத்து ஏழாயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்றுள்ளன.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80.99 அடியாகவும், நீர் இருப்பு 16.2 டிஎம்சி, நீர் வரத்து 186 கனஅடியாகவும் இருக்கின்றது. அணையிலிருந்து பாசனம், குடிநீருக்காக பவானி ஆற்றிலிருந்து 1100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
இதையும் படிங்க: அடுத்த சாகுபடிக்கு மூலதனம் இல்லை: விவசாயிகளை புலம்பவைத்த ஊரடங்கு!