ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் நீர் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் அணையில் மீன் பிடிப்பு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் ரோகு, மிருகால், கட்லா, திலேப்பியா உள்ளிட்ட மீன்குஞ்சுகள் விடப்பட்டு அவை வளர்ந்தபின், அந்த மீன்கள் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ள காலங்களில் மீன்கள் வரத்து அதிகரித்தும் நீர் இருப்பு அதிகமாக உள்ள காலங்களில் மீன்கள் வரத்து குறைவாக இருப்பதும் வழக்கம். தற்போது அணை முழு கொள்ளளவான 105 அடியை எட்டும் நிலையில் உள்ளதால் ஒரு நாளைக்கு 400 கிலோ மீன்கள் மட்டுமே கிடைப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நீர் இருப்பு குறைவாக இருக்கும் காலத்தில் தினமும் 1 முதல் 1.5 டன் வரை மீன்கள் கிடைக்கும் நிலையில் தற்போது மீன்கள் வரத்து 400 கிலோவாக குறைந்துள்ளது. அணையில் மீன்கள் குறைவாக கிடைப்பதால், பவானி ஆற்றில் மீன்கள் பிடிக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். பரிசல்களில் சென்று பவானி ஆற்றில் வலைகளில் சிக்கியுள்ள மீன்களை பிடித்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க : கடல்போல காட்சியளிக்கும் பவானிசாகர் அணை!