மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் நீலகிரி வனப்பகுதியில் உள்ள சிற்றாறுகள் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பில்லூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால், அணைக்கு வரும் உபரி நீரான 18 ஆயிரம் கனஅடி நீர் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இந்த பவானி ஆற்று உபரி நீரும், தெங்குமரஹாடா மாயாற்றில் இருந்து வரும் வெள்ளநீரும் பவானிசாகர் அணையில் கலந்ததால் அணைக்கு நீர்வரத்து 44 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.
இதனால் 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 72.11அடியை எட்டியது. அணையின் நீர் இருப்பு 32.8 டிஎம்சி-இல் இருந்து தற்போது 11.8 டிஎம்சியாக உள்ளது. பில்லூரில் இருந்து திறந்தவிடப்பட்ட உபரிநீர் சித்தன்குட்டை, அய்யம்பாளையம் பவானி ஆறு வழியாக பவானிசாகர் நீர்த்தேக்கத்தை வந்தடையும்.
இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தெங்குமரஹாடா வனப்பகுதியில் பெய்யும் மழைநீர் காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து மாயாற்றில் வெள்ளநீர் கரைபுரண்டோடியது. இதனால் தெங்குமரஹாடா மக்கள் ஆற்றை கடந்து ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டாம் எனவும் வனத்துறையினர் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.