ஈரோடு: பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா மார்ச் 11ஆம் தேதி (திங்கள்கிழமை) பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கோயிலில் இருந்து புறப்பட்ட பண்ணாரி அம்மன் உற்சவர் சிலை 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதியுலா வந்து அருள்பாலித்து வருகிறது. கிராமத்துக்கு வரும் சப்பரம், உற்சவர் சிலைக்கு பூஜைகள் செய்து பக்தர்கள் மலர் தூவி வரவேற்றனர்.
திருவீதியுலா முடிந்து உத்தண்டியூர் கிராமத்துக்கு செல்வதற்கு, பவானி ஆற்றைக் கடந்து செல்ல அம்மன் சப்பரம் பரிசலில் ஏற்றப்பட்டது. பவானி ஆற்றைக் கடக்கும்போது சப்பரம் மூன்று முறை சுற்றி மறுகரைக்கு சென்றது. பக்தர்கள் அக்கரையில் நின்று ஆரவாரத்துடன், அம்மனை வழிபட்டனர்.
கிராமங்களில் திருவீதியுலா நிறைவடைந்து கோயிலில் நாளை மறுதினம் (மார்ச் 14), திருக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். மார்ச் 21ஆம் தேதி இரவு குண்டம் விழாவும், 22ஆம் தேதி அதிகாலை, பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்காண பக்தர்கள் குண்டம் இறங்க உள்ளனர். கரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: வைத்தீஸ்வரன் கோயில் பிரமோற்சவ திருவிழா