ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மார்க்கெட்டில் வாழைத்தார்கள் விற்பனை மந்தமாக இருந்து வந்தது. தற்போது ஆடி மாதம் தொடங்கி உள்ளதால் கோயில் திருவிழா மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு வாழைப்பழங்களின் தேவை அதிகரித்துள்ளது.
இதனால் இன்று புஞ்சைபுளியம்பட்டியில் 2,000-க்கும் மேற்பட்ட வாழைத்தார்களை விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். கடந்தவாரம் 18 கிலோ எடை கொண்ட பூவன் ரக வாழைத்தார் 300 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது ஆடி வெள்ளியை முன்னிட்டு இருமடங்கு விலை உயர்ந்து பூவன் ரக வாழைத்தார் ஒன்று 600 ரூபாய்க்கு விற்பனையானது.
கிராமங்களில் கடை வைத்திருப்போர் வாழைத்தார்களை மொத்தமாகவும், பொதுமக்கள் சீப்பாகவும் வாங்கிச் சென்றனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர், பரமத்தி வேலூர், கொடுமுடி ஆகியப்பகுதிகளில் விளையும் பூவன் ரக வாழைத்தார்களை வாங்கி வருவதாகவும், ஒரு தார் 15 கிலோ முதல் 18 கிலோ வரை எடை கிடைக்கும். ஒருதாரில் 140 பழங்கள் முதல் 160 பழங்கள் வரை இருக்கும் எனவும்; கடந்த வாரம் 300 ரூபாய்க்கு விற்ற பூவன் ரக வாழைத்தார் இந்தவாரம் ஆடி வெள்ளி என்பதால் 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர் மீது கனரக வாகனம் மோதி விபத்து - உயிர் தப்பிய ஊழியரின் சிசிடிவி காட்சி!