சத்தியமங்கலம் அருகே உள்ள ராஜன் நகர் கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டி பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. நேற்று காலை குண்டத்திற்கு தேவையான கரும்பு வெட்ட செல்லுதல் நிகழ்ச்சியும், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இரவு குண்டத்தில் அடுக்கி வைக்கப்பட்ட எரி கரும்பிற்கு நெருப்பு மூட்டுதல் நிகழ்வும், அதிகாலையில் அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து இன்று காலை கோவில் முன்பு தயார் செய்யப்பட்ட 30 அடி நீள குண்டத்திற்கு கோயில் பூசாரி சிறப்பு பூஜைகள் செய்து கற்பூர ஆரத்தி காட்டி குண்டம் இறங்கினார். இதைத் தொடர்ந்து விரதம் இருந்த ஆண் மற்றும் பெண் பக்தர்கள், சிறுவர் சிறுமியர் குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். இந்த விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.