ஈரோடு மாவட்டம், அலங்காரிபாளையத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அய்யாகோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் பண்டிகை நடைபெறுவது வழக்கம். இதன்படி கோயிலில் அய்யன் சுவாமிக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் கோயிலுக்கு வரத் துவங்கினர்.
கோயில் வளாகத்தில் பாம்பு, தேள், பூரான், பல்லி மற்றும் சிலந்தி போன்ற விஷ ஜந்துகளின் மண் உருவ பொம்மைகள் ரூ.10க்கு விற்கப்பட்டன. பக்தர்கள் அதனை வாங்கி அய்யன், கருப்பராயன், தன்னாசியப்பன் மற்றும் பாம்பாட்டி தெய்வங்கள் முன் வைத்து வழிபட்டு அதன்பிறகு கோயில் தெற்கு மதில் சுவர் ஓரத்தில் கற்பூரமேற்றி மண்பொம்மைகளை உடைத்து காணிக்கை செலுத்தினர்.
இவ்வாறு வழிபட்டால் வீடு மற்றும் தோட்டப்பகுதிகளில் விஷ ஜந்துக்கள் தென்படாது என்பது ஐதீகம். இக்கோயிலில் சாம்பல் விபூதியாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சத்தி, கோவை, திருப்பூர், ஈரோடு, கோபி, அந்தியூர், புஞ்சைபுளியம்பட்டி, அன்னூர், சேவூர், நம்பியூர்அவினாசி, மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் பவானிசாகர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.