ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத் துறை மற்றும் ஆயத் துறையின் சார்பில் மதுப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி இன்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறுப் பகுதிகளைச் சேர்ந்த செவிலியர் பயிற்சிக் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்துகொண்ட பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
அப்போது, மதுப்பழக்கம் தனி மனிதருக்கும், குடும்பத்திற்கும் தீங்கானது, மதுப்பழக்கம் மனிதர்களை மிருகமாக்கும், நிம்மதியைக் கெடுக்கும், குடும்பத்தை இழக்கச் செய்யும், நட்பை இழப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும், குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்கு எதிரானது, வருவாய் இழப்பை ஏற்படுத்தும் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பரப் பதாதைகள் கைகளில் ஏந்தி வரப்பட்டன.
மேலும் மதுப்பழக்கத்தை கைவிட்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்திட வேண்டும், மதுப்பழக்கத்தினால் குடும்பத்தினரிடையே அச்ச உணர்வினை ஏற்படுத்தும், குடிநோயாளிகள் மனநிலை பாதிக்கும் நிலை ஏற்படும் என்பன போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இந்தப் பேரணியானது, வள்ளுவர் வீதிப்பகுதியில் தொடங்கி நகரின் முக்கிய வீதி வழியாகச் சென்று அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது.
இதையும் படிங்க:'மதுக் கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் பெருகும்' - அமைச்சர் ஜெயக்குமார்!