ஈரோடு: அடியாட்களுடன் வந்து வீட்டை அபகரிக்க முயற்சி செய்த மாநகராட்சி 36 வது திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்டவர்கள் சிசிடிவி காட்சிகளுடன் , காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு பிருந்தா வீதியில் சுபரஞ்சனா என்பவர் தனது கணவர் சபரிகிரிதர் மற்றும் குழந்தைகளுடன் உடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த 2020 ம் ஆண்டு சுபரஞ்சனாவின் தந்தை பிருந்தா வீதியில் உள்ள 2 1/2 சென்ட் உள்ள வீட்டை, மகள் சுபரஞ்சனாவிற்கு கொடுத்து உள்ளார். இது சுபரஞ்சனாவின் சகோதரர் அருண்குமார் என்பவருக்கு துளியும் பிடிக்கவில்லை. இதன் காரணமாக சுபரஞ்சனாவிற்கும், சகோதரர் அருண்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட வண்ணம் இருந்து வந்து உள்ளது.
இதனால் சுபரஞ்சனா தனது பெயரில் உள்ள இடத்தை தன்னுடைய கணவர் சபரிகிரிதர் பெயருக்கு மாற்றம் செய்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சகோதரர் அருண், பிருந்தா வீதியில் உள்ள சுபரஞ்சனாவின் வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த 36 வார்டு திமுக கவுன்சிலர் பழனியப்பா செந்தில், அருண்குமாருக்கு ஆதரவாக சுபரஞ்சனாவிடம் அடியாட்களுடன் சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது மட்டுமின்றி நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது.
இருப்பினும் நேற்று திமுக கவுன்சிலர் பழனியப்பா செந்தில் மற்றும் அருண்குமார் ஆகியோர் அடியாட்களுடன் சென்று சுபரஞ்சனா குடியிருந்த வீட்டின் கதவுகளை உடைத்து அத்துமீறி உள்ளே சென்று வீட்டில் உள்ள பொருட்களை வெளியே எறிந்து ரகளையில் ஈடுபட்டு உள்ளனர். இது அங்கே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானதை அறிந்தவர்கள் சிசிடிவி கேமராக்களையும் உடைத்த எறிந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சுபரஞ்சனாவின் குடும்பத்தாருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சுபரஞ்சனா, தனது கணவருடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளுடன் ஆதரத்துடன் இன்று புகார் அளித்தார். மேலும் தங்கள் வீட்டை அபரிக்கும் நோக்கத்தில் அடியாட்களை வைத்து அராஜகத்தில் ஈடுபட்ட திமுக சேர்ந்த 36 வது வார்டு கவுன்சிலர் பழனியப்பா செந்தில் மீதும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: ஹலோ..கொஞ்சம் பொறுங்கள்; குறுக்கே பேசிய இளைஞரிடம் டென்ஷனான ஆட்சியர்!