ஈரோடு: நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாகப் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்ட பின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"மழைக்காகத் தமிழ்நாடு அரசு எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
கடந்த அதிமுக ஆட்சியில் இது போன்ற மழைக் காலங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் எடுத்தது. ஆனால் இந்த திமுக அரசு, குறிப்பாக பொதுப்பணித்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.
சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வைத்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்த நினைத்தது. போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளை முடக்க நினைத்து அவர்களைக் கைது செய்தது தவறு. அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாமையால் எதிர்க்கட்சிகள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை முடக்க நினைக்கிறது.
எல்லா மாநிலங்களில் அவரது தாய்மொழி தான் முக்கியம். மூன்றாவது மொழியை யார் கற்க வேண்டுமென்றாலும், எந்த மொழியை யார் வேண்டுமானாலும் கற்கலாம், இதில் கட்டுப்பாடு கிடையாது. இதில் வாக்கு வங்கிக்காக மத்திய அரசு மீது குற்றம் சாட்டுவதை மக்கள் கவனித்து வருகிறார்கள்.
ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையின் மூலம் பொது மக்களுக்கு எந்த தெளிவும் ஏற்படவில்லை மாறாக நடுநிலையாளர்கள் சரி, தவறு என குழப்பி வருகின்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக முன்னாள் முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் வருத்தம் தெரிவித்ததோடு மட்டுமின்றி அருணா ஜெகதீசன் கமிட்டியை அமைத்ததே கடந்த அதிமுக ஆட்சி தான்.
இந்த கமிட்டி அமைத்ததற்கு முக்கிய காரணமே காவல்துறையில் யார் யார் தவறு செய்தார்கள் என்பதைக் கண்டறியவே இது அமைக்கப்பட்டது. அது தற்போது வெளி வந்து உள்ளது”, என்று கூறினார். முன்னதாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதையும் படிங்க: மின்சார கண்ணா - அமைச்சர் செந்தில் பாலாஜி பிறந்தநாளுக்கு திமுகவினர் ஒட்டிய ஷாக் போஸ்டர்கள்