கரோனோ வைரஸ் பரவுவதைத் தடுத்திடும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினிகளைக் கொண்டு கைகளை சுத்தம் செய்திட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு நாள்தோறும் புகார் கொடுத்திடவும், கோரிக்கை மனுக்கள் வழங்கிடவும் 100க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று முதல் அலுவலக வளாகத்தில் காவல்துறை அலுவலர்கள், காவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் அவர்களது கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்திட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து, அலுவலகத்திற்குள் நுழையும் முன்னும், வெளியே செல்பவர்களும் தங்களது கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
மேலும், புகார் மற்றும் கோரிக்கை மனுக்களை வழங்க வருபவர்கள் கண்டிப்பாக தங்களது கைகளை சுத்தம் செய்து கொண்ட பிறகே, அலுவலகத்திற்குள் வர வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு வருகிற 31ஆம் தேதி வரை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்றும், காவல்துறை அலுவலர்கள், காவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைத்து நோய் பரவாமல் தடுப்பதற்கு உதவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: கரோனா குறித்து தவறான தகவல் பரப்பியவர் கைது