ஈரோடு: கோவை சரக டிஐஜி முத்துசாமி செய்தியாளர்களை இன்று (ஜூன் 11) சந்தித்தார். அப்போது அவர், "ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பாக ஈரோடு காவல் கண்காணிப்பாளர் சசி மோகனிடம் புகார் அளித்திருந்தார். இதனை அறிந்த காவல் கண்காணிப்பாளர், சிறுமி துன்புறுத்தப்பட்டு இருக்கிறார் மேலும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கிறார் என அறிந்து, புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுத்த ஈரோடு காவல்துறையினர் சிறுமியின் தாயார், தாயாரின் தோழி மாலதி மற்றும் தாயாரின் உடனிருந்த ஆடவர் ஒருவர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் சிறுமியிடம் எந்த மருத்துவமனை கருமுட்டை எடுத்ததோ அந்த மருத்துவமனை சிறுமியின் வயதை சரி பார்த்தார்களா, அல்லது அந்த சிறுமி கருமுட்டை கொடுக்கும் தகுதி படைத்தவரா, சிறுமிக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டதா என்பதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஈரோட்டில் இரண்டு மருத்துவமனை, சேலத்தில் ஒரு மருத்துவமனை, ஓசூரில் ஒரு மருத்துவமனை, திருச்சியில் ஒரு மருத்துவமனை என மொத்தம் ஐந்து மருத்துவமனைக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பி மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இரண்டு மருத்துவமனையிலிருந்து மருத்துவர்கள் ஈரோட்டிற்கு வந்துள்ளனர் அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது , இதே நேரத்தில் சென்னையிலிருந்து மருத்துவக்குழுவினர் வந்துள்ளனர் அனுபவம் வாய்ந்த மருத்துவ குழுவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழ்நாடு அரசும் ஒரு சிறப்பு குழுவினரை ஏற்படுத்தி அந்த குழுவினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணை மூலம் புகாருக்கு ஆளான மருத்துவமனை மருத்துவர்கள் ஏதேனும் தவறு செய்துள்ளனரா என்பது குறித்து விசாரணைக்குப் பிறகு ஆய்வறிக்கை சமர்ப்பித்து பின் இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் ? என தெரியவரும். இதுபோன்ற குற்றங்கள் நடப்பது தெரியவந்தால் உடனே காவல் நிலையத்தில் உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் அளியுங்கள்.
இப்படிப்பட்ட ஒரு புகாரை வெளியுலகிற்கு கொண்டு வந்த ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனை கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனை மருத்துவர்களுக்கும் விசாரணைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குற்றவாளிகள் யார் ? என கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் புலன் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது என டிஐஜி கூறினார்.
இதையும் படிங்க: சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் - மேலும் 5 மருத்துவமனை நிர்வாகிகளிடம் போலீஸ் விசாரணை