ஈரோடு மாவட்ட தொழிற்சாலைகள் துணைத் தலைமை ஆய்வாளர் அலுவலகத்தில் அதிகளவிலான லஞ்சம் வாங்கப்படுவதாக தொழிற்சாலை உரிமையாளர்களிடமிருந்து மாவட்ட லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினருக்குப் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதேபோல் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அதிகளவில் நன்கொடைகள் கேட்டும் பரிசுப் பொருட்கள் கேட்டும் நிர்ப்பந்திப்பதாகவும் புகார்கள் பெறப்பட்டன.
புகார்களின் பேரில் ஈரோடு எஸ்.கே.சி சாலை கந்தப்ப வீதி குடியிருப்புப் பகுதியின் முதல் மாடியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் துணைத் தலைமை ஆய்வாளர் அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் இன்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
![தொழிற்சாலைகள் துணைத் தலைமை ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10:41:06:1605201066_tn-erd-02-raid-news-script-vis-7205221_12112020223239_1211f_1605200559_515.jpg)
இந்த அதிரடிச் சோதனையில் அலுவலகங்களில் கணக்கில் வராத 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே அலுவலர்களின் கார்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொழிற்சாலைகளிடமிருந்து பெறப்பட்ட நன்கொடை குறித்த விபரம் அடங்கிய டைரிகள், பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அலுவலகத்திலிருந்த துணைத் தலைமை ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் துணை இயக்குநர் சந்திரமோகன் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்குவதற்கும், உரிமங்களைப் புதுப்பித்திடவும், இயந்திரங்கள் பாதுகாப்பானதுதான் என்று சான்றிதழ்கள் வழங்கிடவும், தீபாவளிப் பண்டிகையையொட்டி அனைத்துத் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் தொகையைக் கேட்டு நிர்ப்பந்தம் செய்து நோட்டு போட்டு வசூலில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் அரசுத் துறை அலுவலகம் மற்றும் அவர்களது வாகனங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணம், தீபாவளி நன்கொடைகள் பெற்றதற்கான டைரி, பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ஏனைய அரசு அலுவலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.