சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பசுமைத்தாயகமும், கல்லூரி நிர்வாகமும் இணைந்து காலநிலை அவசரப் பிரகடனம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. கல்லூரியின் நிறுவனத் தலைவர் பெருமாள்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் புவி வெப்பமயமாதல், நீர்நிலைகளை பாதுகாத்தல், மழைநீர்ச் சேகரிப்பின் அவசியம் ஆகியவை குறித்து மாணவ - மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், "மதுக்கடைகளை மூடவேண்டும் என்பது எங்கள் கொள்கை. ஆந்திராவில் தனியார் நடத்திக் கொண்டிருந்த மதுக்கடைகளை அரசே எடுத்து நடத்துவதோடு, அதில் 20 விழுக்காடு கடைகளை மூடவும் அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படுவதோடு, படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டு பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். இதை நான் வரவேற்கிறேன். உச்ச நீதிமன்றம் சென்று தமிழ்நாட்டில் 3, 321 மதுக்கடைகளையும், நாடு முழுவதும் ஒன்பாதாயிரம் மதுக்கடைகளையும் மூடியுள்ளோம். ஆனால் சிறு பிள்ளைகளும் மது அருந்தும் சூழல் தற்போது நம் ஊரில் உருவாகியுள்ளது” என்று பேசினார்.
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து கேள்வியெழுப்பியதற்கு அவர், ”நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ஆள்மாறாட்டம் செய்த நபர்களைக் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டு கடுமையான தண்டனையும் வழங்க வேண்டும்” என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க:
'புழுகு மூட்டை ஸ்டாலினை மக்கள் நம்பபோவதில்லை' - அன்புமணி ராமதாஸ் சாடல்