ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனமான கே.கே.பி. டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் இளமுருகன். அந்நிறுவனத்தில் பண வசூல் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். பிப்.18ஆம் தேதி நிறுவன உரிமையாளர் பாலுசாமி அழைப்பதாக நிறுவனத்திற்குச் சென்றவர் மறுநாள் (19ஆம் தேதி) காலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், உயிரிழந்திருப்பதாகக் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வெளியூர் சென்று ஜவுளி வியாபாரிகளிடம் பண வசூல் செய்யும் பணியில் இருந்த இளமுருகன், பணத்தைக் கையாடல் செய்ததாகவும், அது தொடர்பான விசாரணைக்கு நிறுவனத்திற்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. உடலில் காயங்கள் இருப்பதால் இளமுருகன் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
நிறுவன உரிமையாளர் பாலுசாமி மற்றும் அவரது மகனுக்கு இதில் தொடர்பிருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை இளமுருகன் உடலை வாங்கப் போவதில்லை எனவும் தெரிவித்தனர். இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக கே.கே.பி. டெக்ஸ்டைல்ஸ் நிறுவன மேலாளர் உள்ளிட்ட ஆறு பேரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், ஜவுளி நிறுவனத்தில் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ‘போராட்டத்தைக் கண்டு அரசு அஞ்சுகிறது’ - வைகோ