ஈரோடு: திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் அடுத்து பண்ணாரி சோதனைச்சாவடி உள்ளது. இங்கிருந்து தமிழ்நாடு - கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைச் சாவடி வரை 23 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதியாகும்.
இந்த சாலையில் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்திற்குத் தடையானது கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வனச்சாலையில் போக்குவரத்து நெரிசல்
இதன்காரணமாக மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. காலை 6 மணிக்கு அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் வனச்சாலையில் செல்ல அனுமதிப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதன் காரணமாகப் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இந்த நிலையில் இன்று (மார்ச் 1) கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் பகுதியிலிருந்து நோயாளியை ஏற்றிக்கொண்டு கோவை செல்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனம் சென்றது. அப்போது காரப்பள்ளம் வனச்சோதனைச்சாவடிப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் சிக்கித்தவித்தது.
போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்
சுமார் அரை மணி நேரம் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், அங்கிருந்த வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி ஏற்படுத்தி உதவினர்.
இதைத் தொடர்ந்து நோயாளியுடன் இருந்த ஆம்புலன்ஸ் வாகனம் கோவை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.
இதையும் படிங்க: உக்ரைனில் இந்தியர் பலி: மாணவரின் தந்தைக்கு ஆறுதல் கூறிய பிரதமர்