சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் கீழ்பவானி அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தற்போது வாய்க்காலில் தினந்தோறும் 2 ஆயிரத்து 300 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் சத்தியமங்கலம் அடுத்த செண்பகபுதூர், மேட்டூர், பெரியூர், உக்கரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் சாகுபடி பணிகள் நடந்து வருகிறது. இதற்கான உழவு பணி நிறைவடைந்து தற்போது நெல் நடவுப்பணி தொடங்கியுள்ளது.
கடந்த வருடம் நெல் நடவுப்பணியில் தொழிலாளர்களை பயன்படுத்தாமல், நடவு இயந்திரத்தை நடவுக்காக பயன்படுத்தினர். தற்போது கரோனாவால், பெரும்பாலான விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பதால், அவர்களுக்கு உதவும் நோக்கில் தற்போது, நெல் நடவுப்பணிக்காக கூலித் தொழிலாளர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், பெரியூர் செண்பகபுதூர் கிராமத்திலுள்ள நடவுசெய்யும் பெண்கள், மகிழ்ச்சியுடன் நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். நடவு முதல் அறுவடைவரை வேலை கிடைப்பதால் கேள்விக்குறியான வாழ்வாதாரம் தற்போது உறுதியளிக்கப்பட்ட நிலையில் உள்ளதாக அப்பெண்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், வேலையிழந்த ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் தற்போது வேலை கிடைத்த மகிழ்ச்சியில் தினந்தோறும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து, செண்பகபுதூர் விவசாயி ரங்கராஜ் கூறுகையில், “நடவு இயந்திரம் மூலம் நடவு செய்தால் உற்பத்தி செலவு குறைவாகும்.
ஆனால், உள்ளூர் மக்கள் பரிதாப நிலையைக் கண்ட இங்குள்ள விவசாயிகள், இனி அனைத்து விவசாயப் பணிகளுக்கும் விவசாயக் கூலித் தொழிலாளர்களை பயன்படுத்த முடிவு செய்தோம். இதனையடுத்து, தற்போது தொழிலாளர்களுக்கு வேலை வழங்கி வருகிறோம். தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவளிப்போம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தற்சார்பு வார்த்தை அல்ல; வாழ்க்கை... சொந்த செலவில் குட்டை அமைத்து விவசாயம் செய்யும் கிராமம்!