ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த டி.என்.பாளையம் நால்ரோட்டில் அதிமுக சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று (மார்ச்1) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை திமுக ஆட்சியில் நீங்கள் ஒருபோதும் கண்டிருக்க முடியாது. அதிமுக அரசு சொன்னதை செய்தது, இன்னும் சொல்லப்போனால் சொல்லாததையும் செய்தது. ஒரு அரசு என்ன செய்யவேண்டுமோ அதை சீரும் சிறப்புமாக நாங்கள் செய்துள்ளோம்.
அதிமுக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும். ஆனால், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அருகிலேயே போகமுடியாத நிலை உள்ளது. இரு கைகளுக்கும் கையுறை அணிந்து மனுக்களை வாங்கி பெட்டியில் போடுகிறார். இதனால் பொதுமக்களுக்கு என்ன பயன் ஏற்படப்போகிறது.
நாங்கள் இரவு-பகல் பாராமல் மனுக்களை பெற்று, அலுவலர்களிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்கிறோம். இவர்கள் வாங்கும் மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? யாரை ஏமாற்ற இந்த வேலை. குப்பையில் போடுவதற்காக மனுக்களை வாங்குகின்றனர்.
மனுக்களை அமைச்சர்களிடம் கொடுங்கள் எனக் கூறுங்கள். அதனை சரி செய்யவில்லை எனில் எங்களை கேள்விக் கேளுங்கள். அதை விடுத்து மனுக்களை வாங்கி 100 நாள்களில் நிறைவேற்றுவேன் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. அப்படியில்லையெனில் கோட்டைக்கு வந்து கேளுங்கள் என்றால் கோட்டைக்குள் மக்கள் புக முடியுமா?
திமுக ஆட்சிக்கு வந்தால் பஞ்சம் தலைவிரித்தாடும். திமுக ஆட்சியில் நெசவாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்த வரலாறு இதே பகுதியில் நடந்துள்ளது. ஆனால் இன்று அதிமுக ஆட்சியில் அந்த அவல நிலை மாற்றப்பட்டுள்ளது. நெசவாளர்கள் துயர் துடைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கடன், சுய உதவி குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இன்னும் நான்கு நாள்கள் இருந்திருந்தால், உங்களுடைய குறைகளையும் தீர்த்து இருப்போம். விரைவில் அதுவும் நடக்கும். தேர்தல் அறிக்கையில் இன்னும் பல திட்டங்கள் உள்ளது. நாங்கள் அடிக்கிற அடியில் திமுக எங்கே இருக்கிறது என்று தெரியாமல் போய்விடும். திமுக பெறப்போகும் படுதோல்வியில் இது தானாக நடக்கும்” என்றார்.
இதையும் படிங்க : ஸ்டாலினை எதிர்த்துக் களம்காணும் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்?