ஈரோடு, திருநகர் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர், சையத் ஹாரூன். வழக்கறிஞரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் சென்னை சென்று தங்கி, உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்தி வந்தார்.
கடந்த 40 ஆண்டுகளாக வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டு வரும் சையத் ஹாரூன், கரோனா நோய்ப் பரவலுக்கு முன்னதாக, தனது சொந்த ஊரான ஈரோட்டிற்கு வந்துள்ளார். நோய்ப் பாதிப்பு தீவிரமடைந்ததன் காரணமாக, அவரால் சென்னைக்கு மீண்டும் திரும்ப முடியவில்லை.
சென்னைக்குச் செல்ல இ-பாஸுக்கு முயன்றும் ஊருக்குச் செல்ல முக்கிய காரணங்கள் இல்லாததால், இதுவரை அவருக்கு இ-பாஸ் மறுக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக எவ்வித வருவாயுமின்றி, ஈரோட்டில் வசித்து வருவதால், அவர் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து தனது தினசரி செலவுக்காகவும், அடுத்த வேளைச் செலவுக்காகவும் மிதிவண்டியின் மூலம், தேநீர் விற்பனை செய்ய முடிவு செய்து இன்று (ஜூலை 24) முதல் ஈரோடு நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர் உடையுடன் தேநீர் விற்பனையைத் துணிச்சலுடன் தொடங்கியுள்ளார்.
இதனிடையே தனது மிதிவண்டியில் நீதிமன்றங்களைத் திறந்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விளம்பரப் பதாகைகளை மாட்டியபடி, தனது தேநீர் விற்பனையைத் தொடர்ந்து வருகிறார்.
வழக்கறிஞராக இருந்துவிட்டு தேநீர் விற்பனையில் ஈடுபடுவதற்கு முடிவு செய்துள்ளது குறித்து சையத் ஹாரூனிடம் கேட்டபோது அவர், "தமிழ்நாட்டில் ஏனைய தொழில்களுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்கள் இயங்கி வருவதைப்போல் கட்டுப்பாடுகளுடனும், அரசு விதிமுறைகளுடனும் நீதிமன்றம் செயல்பட அனுமதித்திட வேண்டும். கடந்த நான்கு மாதங்களாக நீதிமன்றம் முற்றிலும் செயல்படாததன் காரணமாக, நீதிமன்றங்களை நம்பி தீர்ப்புக்காக காத்திருக்கும் பல தரப்பினரும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தொழிலை மட்டும் நம்பியுள்ள வழக்கறிஞர்கள், வேறு தொழிலுக்குச் செல்லமுடியாமல் வருவாயின்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய, மாநில அரசுகள் நீதிமன்றங்களை திறக்க உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களுக்கு நிவாரணமாக வழங்கிய மூவாயிரம் ரூபாய் போதுமானதாக இருக்காது என்பதால், 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க... வாட்டியெடுத்த வறுமை... குலத் தொழிலுக்குத் திரும்பிய வழக்கறிஞர்!