ஈரோடு: பெருந்துறை அருகே திருவாச்சியில், அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக இப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குளங்கள், குட்டைகள் மற்றும் ஓடைகள் ஆகியவற்றில் நீர் நிரம்பி, பள்ளியின் வாசல் பகுதியில் தேங்கியும், அவ்வழியாகச் சென்றும் மாணவர்களுக்கு இடையூறாக இருந்துள்ளது.
மேலும், மழைநீருடன், சாக்கடை கழிவு நீரும் கலந்து சென்றுள்ளது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்க பள்ளி ஆசிரியர்களும், பொதுமக்களும் திருவாச்சி ஊராட்சி மன்றத் தலைவரான திமுகவைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம் மனு அளித்துள்ளனர்.
ஊராட்சி மன்றத் தலைவரிடம் மனு அளித்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில், அவர் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக, பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்த அதிமுக பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமாரிடம், ஆசிரியர்களும், பெற்றோரும் பள்ளியின் முன்பகுதியில் செல்லும் தண்ணீர் பிரச்னை குறித்து தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பெருந்துறை தலைவரின் நிதியின் மூலமாக, பள்ளியின் முற்பகுதியில் குழாய் பதிக்க, பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக பணிகளை தொடங்கினார். பணிகள் துவங்கப்பட்ட சில மணி நேரத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் பிரகாஷ், தனது ஆதர்வாளர்களுடன் வந்து பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனையறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஜெயக்குமார், பள்ளி மாணவ, மாணவியர்களின் நலன் கருதி, உடனடியாக பணிகளை தொடங்க வேண்டும் என்று கூறி, அற வழியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இது குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் இணை இயக்குனர், பள்ளி மாணவ, மாணவியர்களின் நலன் கருதி, பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்று கூறினர். இதனையடுத்து, திமுகவைச் சேர்ந்தவர்கள் அதிகாரிகளிடம் பணிகளை தொடங்கக் கூடாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மைக்ரோசாப்ட்-டுடன் இணையும் தமிழக அரசுப்பள்ளிகள் - கரும்பலகையில் இருந்து செயற்கை நுண்ணறிவுக்கு முன்னேற்றம்!