ஈரோடு: தமிழ் திரைப்பட உலகில் எத்தனையோ நடிகைகள் இருந்தாலும், 1980 ஆண்டு காலத்தில் தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் கனவுக்கன்னி ஆக வாழ்ந்து வந்தவர், நடிகை சில்க் ஸ்மிதா. அந்தக் காலகட்டத்தில் வந்த திரைப்படங்களில் குணசேத்திர வேடமாக, ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுபவராக, கதாநாயகியாக என பல்வேறு வேடங்களில் கவர்ச்சியாக நடித்தவர், இவர்.
திரைப்பட போஸ்டர்களில் சில்க் ஸ்மிதாவின் படத்தை போட்டாலே அந்தத் திரைப்படம் வெற்றியடையும் என்று போஸ்டர்களில் சில்க் ஸ்மிதாவின் படத்தை போட்ட தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் உண்டு. 1960ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர், விஜயலட்சுமி.
1970 ஆம் ஆண்டு ஒப்பனை கலைஞராக திரைத்துறை வாழ்க்கையை தொடங்கிய விஜயலட்சுமியை நடிகர் வினுசக்கரவர்த்தி 'வண்டிச்சக்கரம்' என்ற படத்தில் சிலுக்கு என்கின்ற சாராயம் விற்கும் பெண்ணாக முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். விஜயலட்சுமி, 'சில்க் ஸ்மிதா' என்ற அடையாளத்துடன் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.
1996ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். சில்க் ஸ்மிதா மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும், இன்றளவும் தமிழ் திரைப்படத்துறையில் கவர்ச்சி கன்னியாகவே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த டீக்கடைக்காரர் குமார் என்ற சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகர். இவர் ஒவ்வொரு ஆண்டும் சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகிறார்.
ஈரோடு அகில்மேடு வீதியைச் சேர்ந்தவர், குமார். இவர் அதே பகுதியில் சொந்தமாக டீக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்த டீக்கடையில் எந்தப்பக்கம் திரும்பினாலும், சில்க் ஸ்மிதாவின் படம் இல்லாத இடமே இருக்காது என்பதைப் போல டீக்கடை முழுவதும் சில்க் ஸ்மிதாவின் பல்வேறு வகையான படங்களை வைத்துள்ளனர்.
சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகரான டீக்கடை குமார் அவரது நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும், சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளன்று ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த நலத்திட்ட உதவிகளை வழங்கி சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார்.
இதையும் படிங்க: 80s கனவுக் கன்னி சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாள் சிறப்புத் தொகுப்பு!