ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், கடமபூர், ஆசனூர், தலமலை, கேர்மாளம் உள்ளிட்ட 10 வனச்சரகங்கள் உள்ளன. வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் யானைக்கு பிடித்த கரும்பு, வாழை, தென்னை ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன.
வனத்திலிருந்து தீவனம், குடிநீர் தேடி யானைகள் கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால், விவசாயிகள் சூரிய சக்தியில் செயல்படும் மின்வேலி அமைத்து பயிர்களை பாதுகாத்து வருகின்றனர். சில நேரங்களில் காட்டுப்பன்றிகள், யானைகள் சூரிய சக்தியில் செயல்படும் மின்வேலியை தாண்டி காட்டுக்குள் புகுந்து வாழை, மக்காச்சோளம் பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.
இதனை தடுப்பதற்கு விவசாயிகளுக்கு அரசு அளித்த இலவச மின்சாரத்தை நேரடியாக மின்கம்பத்திலிருந்து மின்வேலியில் பாய்ச்சுவதால் யானைகள், காட்டுப்பன்றிகள் உயிரிழப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. தாளவாடி, ஜீரஹள்ளி, பவானிசாகர் வனச்சரகத்தில் தொடர்ந்து 4 யானைகள் மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதால் வனத்துறை, மின்சாரா வாரிய அலுவலர்கள் விவசாய தோட்டங்களில் ஆய்வு செய்து எச்சரித்து வருகின்றனர்.
இதையடுத்து மின்சாரம் பாய்ச்சி யானைகளை கொல்லும் விவசாயிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.