ஈரோடு : தமிழ்நாடு வனத்துறையில் 1996ஆம் ஆண்டு முதல் உதவி கால்நடை மருத்துவராக அசோகன் பணியாற்றி வருகிறார். இவர் முதுமலை புலிகள் காப்பகத்தில் குடற்புழு மற்றும் காயமடைந்த 5 யானைகளுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளார். போதிய மருத்துவ வசதியில்லாத காலகட்டத்தில் யானைகளுக்கு ஏற்படும் தொண்டை அடைப்பான், நாடாப்புழு நோயை கண்டுபிடித்துள்ளார்.
இதற்கு அப்போதையை அமைச்சர் மேனகா காந்தி அசோகனுக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கியுள்ளார். நாகபட்டினத்தில் 6 ஆயிரம் கடல் ஆமைகள் குஞ்சு பொறித்து இனபெருக்கம் செய்ய உதவியுள்ளார். 4 திமிங்கலம், டால்பின்ககளுக்கு உடற்கூராய்வு செய்து இறப்புக்கான காரணத்தை கண்டுபிடித்துள்ளார். அடிப்பட்ட பாம்புகள் மற்றும் பறவைகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
கோவை உயிரியல் பூங்காவில் இருந்த வனவிலங்குகள் எண்ணிக்கை 485ல் இருந்து 985ஆக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டார். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட பாம்புகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளார். கடந்த 4 வருடத்தில் 25 யானைகள், 5 காட்டெருமைகள், மலைப்பாம்புகள் ஆராய்ச்சி மற்றும் 40 பறவைகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
வனவிலங்குகள் உயிரை காப்பாற்றிய சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வனகால்நடை மருத்துவர் அசோகனுக்கு தமிழ்நாடு அரசின் வீர தீர செயலுக்கான சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கரோனாவால் அசோகனால் பாதிக்கபட்டுள்ளதால் நேரில் சென்று விருது வாங்க முடியாத நிலையில் விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.