ஊதிய உயர்வு, ஓய்வுபெற்ற ஊழியர்களின் பணப்பலனை நிலுவையின்றி கொடுத்தல், டிஏ உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மூன்றாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள், பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர். தற்போது தமிழகத்தில் 10 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாகவும், ஆனால் போக்குவரத்துக் கழக நிர்வாகம் அதிக பேருந்துகள் இயக்கப்படுவதாக சதவீதத்தை உயர்த்திக் காட்டுவதாகவும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், “சத்தியமங்கலம் போக்குவரத்துக் கழக பணிமனையில் மொத்தமுள்ள 85 பேருந்துகளில், இன்று (பிப்.27) 17 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், 35 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக்கழகத்தினர் பொய்க்கணக்கு காட்டுகின்றனர்.
அனுபவமற்ற தற்காலிக தொழிலாளர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. மேலும் நடத்துனர் இல்லாமல் ஓட்டுனரை மட்டுமே வைத்து பெயரளவுக்கு பணிமனையில் இருந்து இயக்கி சென்று பொய் கணக்கு காட்டுகின்றனர்” என்றனர்.