சத்திய மங்கலம் அருகே புதுபீர்கடவு கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை(45). இவர், கடந்த மே.25 ஆம் தேதி காலை சத்தியமங்கலம் பேருந்து நிலைய வணிக வளாக பகுதியில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இவரை காவல்துறையினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, மறுநாள் சின்னதுரை இறந்தார்.
உடற்கூறாய்வில் உடலில் பலத்த காயம் இருந்ததாகவும், பலமாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரியவந்தது. இதையடுத்து சத்தியமங்கலம் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த வழக்கு தொடர்பாக, சந்தேகத்தின்பேரில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள சாவக்கட்டுபாளையத்தை சேர்ந்த கோபால் (42) என்பவரை பிடித்து விசாரித்தனர். சின்னதுரையை தாக்கி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
இதுகுறித்து கோபால் அளித்த வாக்குமூலத்தில், "எனது மகனின் படிப்பு செலவிற்காக உறவினரிடம் ரு.50 ஆயிரம் கடனாக பெற்றுக்கொண்டு, மே.25ஆம் தேதி இரவு சத்தியமங்கலம் பேருந்து நிலையம் வந்தேன். ஊருக்கு செல்ல பேருந்து இல்லாததால், அங்கேயே படுத்து உறங்கினேன். இரவு ஒரு மணியளவில் நான் வைத்திருந்த பணப்பையை 3 நபர்கள் பறித்துக்கொண்டு ஓடினர்.
அவர்களை துரத்தும்போது சின்னதுரை மட்டும் சிக்கினார். அவரை பலமாக தாக்கிவிட்டு பணப்பையை பறித்துக்கொண்டு, அதிகாலையில் பஸ் பிடித்து ஊருக்கு சென்றுவிட்டேன். காலையில் பேப்பரை பார்க்கும்போது, நான் அடித்த நபர் இறந்தது தெரியவந்தது. பணத்தை பறிப்பதற்காகவே தாக்கினேன். கொலை செய்யும் எண்ணத்தில் தாக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கோபால் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.