ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (30). ஓட்டுநராகப் பணிபுரியும் சரவணன், தேவராஜ் உடன் அவரது மினி லாரியில் மஞ்சள் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, ஆசனூர் மலைப்பகுதியிலிருந்து, திம்பம் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது லாரியானது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததோடு, பக்கவாட்டுத் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு சுமார் 150 அடி பள்ளத்தில் உருண்டோடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மினி லாரியிலிருந்த மஞ்சள் மூட்டைகளானது வனப்பகுதியில் விழுந்து சிதறியது. மேலும் சரவணன், தேவராஜ் ஆகிய இருவரும் மினி லாரியில் சிக்கித் தவிப்பதைக் கண்ட மற்ற வாகன ஓட்டிகள் உடனடியாக இருவரை மீட்க முயற்சித்தனர்.
பின்னர் சத்தியமங்கலத்திலிருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டதோடு பண்ணாரி சோதனைச்சாவடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று காயம்பட்ட இருவரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்தில் ஓட்டுநர் சரவணனுக்கு காலில் எலும்பு முறிவு, தேவராஜுக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. தற்போது இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் தண்ணீர் தொட்டியில் அக்கா,தம்பி சடலமாக மீட்பு!